அதிக விபத்து நடக்கும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட 69 இடங்கள் அவிநாசி ரோட்டில் மட்டும் 7 ஹாட் ஸ்பாட்

கோவை: மாநகரில் மொத்தம் 69 இடங்கள் 'ஹாட் ஸ்பாட்' பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களில் கோவையில் இருசக்கர வாகன விபத்துகள், அதிவேக விபத்துகள் மற்றும் சிக்னல் மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

இரவில் அதிக விபத்துக்கள் நடக்கும் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய ரோடுகளில், இரவு ரோந்து மற்றும் திடீர் வாகன சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'கோவையில் 35 ஹாட் ஸ்பாட் பகுதிகள் இருந்தன. மீண்டும் விரிவான ஆய்வு செய்து, ஒரே இடத்தில் மூன்று உயிரிழப்பு விபத்துகள் அல்லது 10 இறப்பு இல்லாத விபத்துகள் பதிவாகி இருந்தால், அந்த பகுதி 'ஹாட் ஸ்பாட்' ஆக அறிவிக்கப்படுகிறது.

அதன்படி, 69 ஹாட் ஸ்பாட் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவிநாசி ரோட்டில் மட்டும் 7 ஹாட் ஸ்பாட்கள் உள்ளன. இதுபோன்ற இடங்களில், விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்கிறோம்.

பொதுமக்கள் சாலை விதிகளை கடைப்பிடித்து, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். வேகத்தை குறைத்தாலே பெரும்பாலான விபத்துகளை தவிர்க்க முடியும்' என்றனர்.

Advertisement