தனியார் மனமகிழ் மன்ற மதுபான கடைகளால் மக்களுக்கு தொல்லை: பரமக்குடி வியாபாரிகள் சங்கம் மனு

பரமக்குடி: பரமக்குடியில் செயல்படும் மனமகிழ் மன்ற தனியார் மதுபானக் கடைகளால் மக்கள் இன்னலுக்கு ஆளாவதால் இடமாற்றம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடியில் பஸ்ஸ்டாண்ட் அருகிலும் மற்றும் ரயில்வே பீடர் ரோட்டிலும் எப்.எல்., 2, எப்.எல்., 3 தனியார் மதுபான நிறுவனம் பார் வசதியுடன் செயல்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மாக் கடை அகற்றப்பட்டுள்ளது. ஆனால் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருமண மஹால், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ள அதே பகுதியில் தனியார் மதுபானக் கடை செயல்படுகிறது.

இதே போல் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் தினமும் நுாற்றுக்கணக்கானவர்கள் பயணிக்கின்றனர். மேலும் கண் மருத்துவமனை, வங்கிகள், ஸ்கேன் சென்டர் என உள்ளதால் ஏராளமான பெண்கள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களும் அதிகளவில் பயணிக்கின்றனர்.

ஆகவே இப்பகுதிகளில் செயல்படும் தனியார் மதுபானக் கடைகளை அகற்றி மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதே போல் தலைமைச் செயலகம் உட்பட 11 துறையினருக்கு நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைவர் போஸ், பொதுச் செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

---

Advertisement