காலி நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு; அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகை
கோட்டக்குப்பம்: கோட்டகுப்பம் அருகே காலி நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கோட்டகுப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடி குப்பம் மீனவர்களுக்கு அரசு சார்பில் சுனாமி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் அருகில் அரை ஏக்கர் காலி நிலத்தை அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த விளையாட்டு மைதானத்தை தனி நபர் ஒருவர் தனக்கு சொந்தமானது எனக் கூறி நேற்று காலை 10;00 மணிக்கு இடத்தை அளவீடு செய்ய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயரை அழைத்து வந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட அப்பகுதி மீனவர்கள் திரண்டு அதிகாரிகளிடம், இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம். தனி நபர் சொந்தம் கொண்டாடுவது தவறு என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, தகுந்த ஆவணங்களுடன் வந்து இடத்தை அளவீடு செய்யுங்கள் என கூறியதால் அதிகாரிகள் திரும்பினர்.