சூலக்கல் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் வழிபாடு கோலாகலம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 11ம் தேதி, திருத்தேர் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. 12ம் தேதி, வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழாவும், 18ம் தேதி, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நடந்தது.

கடந்த, 19ம் தேதி கம்பம் நடுதல், பூவோடு வழிபாடும், 20ம்தேதி யாகசாலை ஆரம்பம் மற்றும் கொடியேற்றம், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் பூவோடு எடுத்தல் நடந்தது.

நேற்று முன்தினம், அம்மன் ஊஞ்சல் வழிபாடு மற்றும் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார், அறங்காவலர் குழு தலைவர் கொற்றவேலு, அறங்காவலர்கள் சுதாகர், பாலசுப்ரமணியம், பழனிசாமி, கோவில் செயல் அலுவலர் சீனிவாசசம்பத் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வரும், 27ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், இரவு, 7:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. 28ம் தேதி, காலை, 10:30 மணிக்கு மாரியம்மன் மற்றும் விநாயகர் திருத்தேருக்கு புறப்படுதல், மாலை, 4:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 29ம் தேதி, மாலை, 4:30 மணிக்கு, இரண்டாம் நாள் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

வரும், 30ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் நாள் திருத்தேர் வடம் பிடித்தல், தேர் நிலைக்கு வருதல், தேர் கால் பார்த்தல் நடக்கிறது. 31ம் தேதி கம்பம் கலைத்தல், மஞ்சள் நீராடல் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு, மகா அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடக்கிறது.

Advertisement