பாகூர் மூலநாதர் கோவிலில் 108 கலசாபிஷேகம்
பாகூர்: பாகூர் ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவிலில் நேற்று 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அக்னி நட்சத்திரத்தையொட்டி, கடந்த 4ம் தேதி முதல் மூலநாதர் சுவாமிக்கு தாராபிஷேகம் நடந்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக நன்மை வேண்டி, சென்னை மணிமங்கலம் படப்பை முரளிதர சுவாமிகளின் அருளாசியுடன் நேற்று மூலநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி, 6.00 மணிக்கு பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, 11 முறை ருத்ரபாராயணம், விசேஷ ேஹாமங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 9.00 மணிக்கு மூலநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் செய்து, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சாரியார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.