கல்பட்டு தடுப்பணை சேதம் :நீரின்றி விவசாயம் பாதிப்பு
சித்தாமூர்:கல்பட்டு கிராமத்தில் ஏரி நீர்வரத்து கால்வாயில் சேதமடைந்துள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சித்தாமூர் அருகே கல்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.
இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க, தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 2013ல் ஏரி நீர்வரத்து கால்வாயில் தடுப்பணை கட்டப்பட்டது.
இதில் தண்ணீர் தேங்கி அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து, விவசாயமும் செழிக்க தொடங்கியது,.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இன்றி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், பருவமழையின் போது கால்வாயில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு, தடுப்பணை முழுதும் சேதமடைந்தது.
இதனால், தடுப்பணையிலிருந்து வெளியேறும் நீர் சேமிக்க முடியாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கியது. விவசாயமும் பாதிக்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.