தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் ராஜினாமா!

27

சென்னை: தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்வது என்ற நிலைப்பாட்டை எடுத்தோம் என்று அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்து விலகி பின்னர் தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி;

மே 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. மே 7ம் தேதி அதிமுகவில் பல்வேறு பிரச்னைகள் நடந்தது. தலைமைக்குழு நிர்வாகிகள் இரண்டு நிலைப்பாடுகளை எடுத்தனர். ஒன்று திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இன்னொன்று தவெகவுக்கு ஆதரவு அளித்து, ஆளுங்கட்சி போன்று நம்மால் மக்கள் பணியாற்ற முடியும் என்ற இரு நிலைப்பாடுகளை எடுத்தனர்.

எங்களுக்கு திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை. இது அங்கேயுள்ள எம்எல்ஏக்கள் பலர் மனதிலும் ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. நாங்கள் முன்னதாக முடிவு எடுத்து விட்டோம். சிவி சண்முகம் தலைமையில் 30 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டனர். திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கக்கூடாது என்று தான் 30 எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டோம்.

தவெக ஆதரவு நிலைப்பாட்டை தான் எடுத்தோம். நாங்கள் அதிமுகவை விட்டு போகவில்லை. ஆனால் அன்றைய தினத்தில் இருந்து அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அவதூறாக பல்வேறு விமர்சனங்களை வைத்தனர். தொகுதியில் எங்களை பற்றி அவதூறு பரப்புகின்றனர்.

எங்களின் நிலைப்பாடு என்னவென்றால் துரோகம் செய்யும் விதமாக திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க மனம் விரும்பவில்லை. எங்களை போன்றவர்கள் அங்கே இருக்கின்ற்னர், நாங்கள் முன்னதாகவே முடிவு எடுத்துவிட்டோம்.

கடந்த முறை அதிகார அளவில் திமுக ஆட்சியில் இருந்தது. நாங்கள் சட்டமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் 10 சதவீதம் கோரிக்கை கூட நிறைவேற்ற முடியவில்லை. இந்த முறையும் எங்களால் எதிர்க்கட்சியாக செயல்பட முடியாது. இம்முறையும் மக்கள் எங்களை எம்எல்ஏவாக வெற்றி பெற வைத்தனர். அவர்களின் நிலைப்பாட்டை புரிந்து தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இது எங்களின் தனிப்பட்ட நிலைப்பாடு. சுயநலத்துக்காக எடுக்கவில்லை.

சுயமரியாதைக்காகவும், எங்களின் தொகுதி மக்களின் நலன்களுக்காகவும் தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அதேபோன்று, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு, முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றோம். அவர் பதவியேற்று 15 நாட்கள் கூட ஆகவில்லை. பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறார். நல்லாட்சி கொடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது. இடைத்தேர்தலில் நாங்கள் வேட்பாளரா இல்லையா என்பதை தலைமை முடிவு எடுக்கும். அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்.

இவ்வாறு மரகதம் குமரவேல் கூறினார்.

Advertisement