கேபிள் கார் கோளாறால் அந்தரத்தில் தவித்த 300 பேர்; பத்திரமாக மீட்டது மீட்பு படை
நமது சிறப்பு நிருபர்
ஜம்மு - காஷ்மீர் குல்மார்க்கில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 'கேபிள் கார்' சேவை திடீரென நின்றதை அடுத்து, 300க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் அந்தரத்தில் தவித்தனர். அவர்களை பத்திரமாக மீட்ட மீட்பு படையினரை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள மிக பிரபலமான மலைப்பிரதேசம் குல்மார்க். கடல் மட்டத்தில் இருந்து 8,700 அடி உயரத்தில் உள்ள இந்த சுற்றுலா தலம், கோடை மற்றும் குளிர்காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணியரை ஈர்த்து வருகிறது. இங்கு செயல்படும், 'கோண்டோலா' எனப்படும், 'கேபிள் கார்' சேவை, உலகின் இரண்டாவது மிக உயரமான மற்றும் ஆசியாவின் மிக நீளமான கேபிள் சவாரியாகும்.
மொத்தம் 5 கி.மீ., துார பயணத்தில், 8,500 - 14,000 அடி வரை பறக்கும் கேபிள் கார் சேவை வாயிலாக, குல்மார்க்கின் எழில் கொஞ்சும் அழகை சுற்றுலா பயணியரால் ரசிக்க முடியும். குல்மார்க்கில் குவிந்த சுற்றுலா பயணியர், கேபிள் காரில் நேற்று பயணித்த போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கேபிள் கார் சேவை திடீரென தடைப்பட்டது. இதனால், பறந்து கொண்டிருந்த 65 கேபிள் கார் பெட்டிகள் ஆங்காங்கே அந்தரத்தில் நின்றன.
அதில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் பயத்தில் அலறினர். தங்களை காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர்.கேபிள் கார் சேவை நின்றதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளூர் போலீசார் உதவியுடன் கயிறு ஏணியை பயன்படுத்தி பெட்டிகளில் சிக்கி தவித்த சுற்றுலா பயணியர் அனைவரையும் மீட்டனர்.
சுற்றுலா பயணியரை பத்திரமாக மீட்ட மீட்பு படையினரை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: குல்மார்க்கில் கேபிள் கார்களில் சிக்கியிருந்த 300 சுற்றுலாப் பயணிகளை மீட்பு படை வெற்றிகரமாக மீட்டது.
இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீசார், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்த சவாலான நடவடிக்கை திறமையுடனும் உறுதியுடனும் நடந்து இருக்கிறது. இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து வீரர்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் நமது தேசம் பாராட்டுகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஆஹா என்ன அர்ப்பணிப்பு நமது இராணுவ வீரர்கள் உலகில் தலைசிறந்தவர்கள் என்பதில் நாம் பெருமை கொள்வோம் இறையருள் என்றும் நமக்கு உண்டு.
உயிரை பணயம் வைத்து சேவை செய்யும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
Our soldiers, militaries, and police are brave and strong.
Congratulations