சிறைக்குள் கஞ்சா பந்து வீசியது குறித்து விசாரணை

சேலம்: சேலம் மத்திய சிறையில் 1,300க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் உள்ளனர். சிறையில் மொபைல்போன், கஞ்சா பந்து வீச்சு போன்றவற்றை தடுக்கும் வகையில் போச்சம்பள்ளி பட்டாலியனை சேர்ந்த, 110 போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சிறையின் பின் பகுதியில் கஞ்சா பந்து வீசியுள்ளனர். அது 15ம் பிளாக்கில் விழுந்துள்ளது. ரோந்து பணியில் இருந்த உதவி சிறை அலுவலர் மனோஜ், அந்த பந்தை எஸ்.பி., வினோத்திடம் ஒப்படைத்தார். அதை அவர் பிரித்து பார்த்த போது அதில், 110 கிராம் கஞ்சா, 3 பாக்கெட் ஹான்ஸ் இருந்துள்ளது.

இதையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கஞ்சா பந்தை வீசி விட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,'சேலம் மத்திய சிறையின் பின் பகுதியில் இருந்து பந்து வீசப்பட்டுள்ளது. இது போல ஏற்கனவே பந்து வீசினார்களா, அதை சிறை வார்டன்கள் கைதிகளுக்கு கொடுத்துள்ளார்களா என்பது விசாரணைக்கு பின் தெரியவரும்,' என்றனர்.

Advertisement