அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; உபியில் பஸ் கவிழ்ந்து பயணிகள் 6 பேர் பரிதாப பலி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் உன்னாவோ பகுதியில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பயணிகள் ஆறு பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில், லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் டில்லியிலிருந்து பீஹார் நோக்கிச் சென்ற இரட்டை அடுக்கு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் பயணிகள் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதிகாலை 5.15 மணியளவில், பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டிரைவர் வாகனம் ஓட்டும்போது தூங்கிவிட்டதால், விபத்து நேர்ந்து உள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இறந்தவரை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: உன்னாவோ மாவட்டத்தில் உள்ள லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் நடந்த இந்தத் துயரமான சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் இதயத்தை நொறுக்குவதாகவும், ஆன்மாவை உலுக்குவதாகவும் உள்ளன.

துயரத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடையவும், துயரத்தில் வாடும் குடும்பங்கள் இந்த அளவற்ற துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் வலிமையைப் பெறவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து உடல்நலம் தேறவும் ஸ்ரீ ராமர் பெருமானிடம் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இரவு நேர பயணத்தை தவிருங்கள்!



இந்த விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இரவு பயணங்களால் அடுத்தடுத்து விபத்து நடக்கிறது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்து நடை பெறும். இந்த விபத்து இரவு 8 மணிக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement