புதுச்சேரியில் தொடர் பைக் திருட்டு தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது

புதுச்சேரி: தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து, 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி வைட் டவுன் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கடந்த மாதம் தொடர்ந்து பைக்குகள் திருடு போயின. இதுகுறித்த புகார்களின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இதையடுத்து, சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., சுருதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அவர்கள், கடந்த 18ம் தேதி வெங்கட்டா நகர், 45 அடி சாலை பூங்கா அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் சந்தேகப்படும்படி வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம், உடப்பேரி, வடக்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் வரதராஜன், 39; வெல்டர், மீன்சுருட்டி, சொக்கலிங்கம் மெயின் ரோட்டை சேர்ந்த வீரசாமி மகன் விஜய், 28; கோழி பண்ணை தொழிலாளி என்பதும், அவர்கள் ஓட்டி வந்த பைக் நீடராஜப்பர் தெருவில் உள்ள அமுதசுரபி அருகே இருந்து திருடி வந்தது தெரியவந்தது.

பைக்கை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, கோர்ட் அனுமதி பெற்று போலீசார் இருவரையும் நேற்று முன்தினம் (25ம் தேதி) 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்கள், புதுச்சேரி நகரப் பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து மேலும் 5 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வரதராஜன் மீது ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் 7 திருட்டு வழக்குகளும், விஜய் மீது மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் 2 அடிதடி வழக்குகளும் உள்ளன. பின், இருவரையும் போலீசார் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


இருள் சூழ்ந்த பகுதிகளில் மின் விளக்கு அமைக்க பரிந்துரை



இதுகுறித்து எஸ்.பி., சுருதி கூறுகையில், 'புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் பைக்குகள் திருடு போவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பைக்குகளிலேயே ஞாபகமறதியாக சாவியை விட்டு செல்வதால் நடக்கிறது. பொதுமக்கள், தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, வாகனத்தை முறையாக பூட்டிவிட்டு, சாவியை கவனமாக எடுத்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பைக் திருட்டை தடுக்க போலீசாரின் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும். தேவையான இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தவும், பொதுப்பணித் துறை மூலம் இருள் சூழ்ந்த சாலைகளில் மின் விளக்குகள் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement