'ரூட்' மாறுகிறார் பா.ஜ., அண்ணாமலை; மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம்

23

சென்னை: 'ஒன்பதாம் வகுப்பில் இருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்ற திட்டத்தை, இந்தாண்டு முதல் அமல்படுத்தும் அறிவிப்பை, மத்திய கல்வி அமைச்சகம் உடனே திரும்பப் பெற வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
இந்தாண்டு ஏப்ரலில், சி.பி.எஸ்.இ., அமைப்பு, 'மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பில் இருந்து, மூன்று மொழிகள் கட்டாயம்; அந்த மூன்று மொழிகளில் இரு மொழிகள், இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்' என அறிவித்தது.

அப்போது, இந்தியாவின் பலதரப்பட்ட, இலக்கிய மற்றும் கலாசார பாரம்பரியத்தை, சிறு வயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.

மேலும், ஏப்ரலில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'ஒன்பதாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, 2029 - 30 கல்வியாண்டில் இருந்து மட்டுமே அமல்படுத்தப்படும்' என்றும், தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், இம்மாதம் 15ம் தேதி, சி.பி.எஸ்.இ., அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், இந்த கல்வியாண்டில் இருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவதாக அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ.,யின் திடீர் அறிவிப்பு, தமிழக மாணவர்களின் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனெனில், அவர்களின் குழந்தைகள், ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே, தாங்கள் விரும்பிய மொழியை தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டு உள்ள புதிய அறிவிப்பின்படி, 'ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், மூன்று மொழிகளை கட்டாயமாக கற்க வேண்டும்; அதில், இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்; இந்தாண்டு ஜூலை முதலே அமலுக்கு வரும்' என்று கூறப்பட்டு உள்ளது.

மிகவும் குறுகிய காலத்திற்குள், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு புதிய மொழியை கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்த கல்வித் திறனையும் பாதிக்கும்.

எனவே, இந்த புதிய அறிவிப்பை, மத்திய கல்வி அமைச்சகம் உடனே திரும்ப பெற வேண்டும். முன்னர் அறிவித்தபடி, 2029 - 30 கல்வியாண்டில் இருந்து மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement