ஏ.டி.ஜி.பி., அருண் விவகாரத்தில் த.வெ.க., இரட்டை வேடம்! அன்று புகார்; இன்று உயர் பதவி

7

சென்னை: 'ஏ.டி.ஜி.பி., அருண், தி.மு.க.,வின் விசுவாசியாக இருக்கிறார்; அவரை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்' என, தேர்தல் பிரசாரத்தின்போது புகார் அளித்த தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், முதல்வரான பின், அவருக்கு முக்கிய பதவி கொடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலின்போது, சென்னை போலீஸ் கமிஷனராக அருண் இருந்தார். அவர் மீது, த.வெ.க., தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா சரமாரியாக புகார் கூறினார்.

சென்னையில் அவர் அளித்த பல்வேறு பேட்டிகளில், 'சென்னை கமிஷனர் அருண், உளவுத்துறை அதிகாரிகள், ஸ்டாலினுக்கு விசுவாசமாக இருக்கின்றனர்.

'ஸ்டாலினுடன் பேசித்தான், இன்னமும் அருண் முடிவெடுக்கிறார். அருணை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். சென்னையில், மீண்டும் கரூர் மாதிரி ஒரு சம்பவம் நடக்க வேண்டுமென அருண் திட்டமிடுகிறார்.

'சட்டத்தையும் நீதியையும் அருண் ஐ.பி.எஸ்., பின்பற்றுவதே இல்லை' என அடுக்கடுக்காக குற்றம்சாட்டி இருந்தார்.

த.வெ.க.,வை பிரசாரம் செய்யாவிடாமல் அருண் தடுப்பதாகவும், அவரை பணியிட மாற்றம் செய்யுமாறும், மார்ச் 28ம் தேதி தலைமைச் செயலகத்துக்கு நேரில் சென்று, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயகிடம், த.வெ.க., தலைவர் விஜய் புகார் அளித்தார்.

த.வெ.க.,வின் தொடர்ச்சியான புகாரையடுத்து, சென்னை கமிஷனர் பதவியில் இருந்து, அருண் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். த.வெ.க., ஆட்சி அமைந்த பின், அருண் மீது நடவடிக்கை பாயும் என, அக்கட்சியினர் நம்பினர்.

ஆனால், யாரும் எதிர்பாரா விதமாக, டி.ஜி.பி.,க்கு இணையான, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பணியில் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்; இது த.வெ.க.,வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதுதொடர்பாக, த.வெ.க., வட்டாரத்தில் சிலர் கூறியதாவது:
அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த த.வெ.க.,வினரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால், மேலிடத்தில் இருப்பவர்கள் அப்படி நினைக்கவில்லை. விஜய் முதல்வராக இருந்தாலும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மாற்றத்தை, மூன்று பேர் கொண்ட, 'பவர் சென்டர்' தான் பார்த்துக் கொண்டது. அவர்களின் நன்மதிப்பில் அருண் இருந்தார்.

அதன்படி, பிரசாரத்தின் இறுதி கட்டத்தில், த.வெ.க., பவர் சென்டரிடம் சரண் அடைந்து விட்டார். அதோடு, சென்னை கொளத்துாரில், த.வெ.க.,வுக்கு ஆதரவாக ஒருசில விஷயங்களையும் செய்து கொடுத்தார். விஜய் முதல்வரான பின், அவரை அருண் இருமுறை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

த.வெ.க.,வுடன் வி.சி.க., கூட்டணி அமைத்த பின், திருமாவளவன் மூலமாக, அருணுக்கு சிபாரிசு செய்ய வைத்தனர். அதன்படியே, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement