புதிய டி.ஜி.பி., யார்? மூவரின் பெயர் பரிந்துரை!

6

சென்னை: புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூன்று மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பெயர்களை, யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழக காவல் துறை டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட், ஏப்ரலில் சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டார்.

அதேநேரத்தில், காவல் துறைக்கு புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பட்டியலில், அவர் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், டில்லியில் உள்ள, யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் மணிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 11 பேர் அடங்கிய பட்டியல் சமர்பிக்கப்பட்டது.

அதை பரிசீலித்து, காவல் உயர் பயிற்சியகத்தின் டி.ஜி.பி.,யாக உள்ள ராஜிவ்குமார், தற்போது, டி.ஜி.பி.,யாக உள்ள சந்தீப்ராய் ரத்தோட், மத்திய அரசு பணியில் உள்ள, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்களை இறுதி செய்து, தமிழக அரசுக்கு, யு.பி.எஸ்.சி., பரிந்துரை செய்துள்ளது. இவர்களில் ஒருவரை, தமிழக அரசு புதிய டி.ஜி.பி.,யாக நியமிக்க வேண்டும்.

Advertisement