வைபவ் சூர்யவன்ஷி 'சூறாவளி': ராஜஸ்தான் அணி வெற்றி
புதிய சண்டிகர்: 'எலிமினேட்டர்' போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் 'சூறாவளி' ஆட்டம் கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி வெளியேறியது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. இதன் பைனலுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. புதிய சண்டிகரில் உள்ள மஹாராஜ் யாதவிந்திர சிங் மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில், புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
வைபவ் விளாசல்: ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. கம்மின்ஸ் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர் அடித்த வைபவ், சாகிப் ஹுசைன் வீசிய 4வது ஓவரில் 3 சிக்சர் அடித்து 16 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்த போது வைபவ் (97 ரன், 29 பந்து, 12X6, 5X4) அவுட்டானார். ஜெய்ஸ்வால் (29) நிலைக்கவில்லை.
பின் இணைந்த துருவ் ஜுரெல், கேப்டன் ரியான் பராக் ஜோடி நம்பிக்கை தந்தது. ஷிவாங் குமார் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர் அடித்த ஜுரெல், 20 பந்தில் அரைசதம் எட்டினார். ஜுரெல் 50 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ரியான் பராக் (26) நிலைக்கவில்லை. தசுன் ஷனகா (5), டோனோவன் பெரெய்ரா (12), ஜோப்ரா ஆர்ச்சர் (4), பர்கர் (1) சோபிக்கவில்லை. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 243/8 ரன் எடுத்தது. ஜடேஜா (12), சுஷாந்த் மிஷ்ரா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆர்ச்சர் அசத்தல்: கடின இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா (0) ஏமாற்றினார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விளாசிய இஷான் கிஷான் (33), அதே ஓவரில் ஆட்டமிழந்தார். ஸ்மரன் (1) ஏமாற்றினார். டிராவிஸ் ஹெட் (17), கிளாசன் (18) சோபிக்கவில்லை. நிதிஷ் குமார் ரெட்டி (38), சலில் அரோரா (35) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் கம்மின்ஸ் (1) நிலைக்கவில்லை. ஆர்ச்சர் வீசிய 17வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார் ஷிவாங் குமார். பர்கர் 'வேகத்தில்' ஈஷான் மலிங்கா (5) வெளியேறினார். ஷிவாங் (27) ஆறுதல் தந்தார்.
ஐதராபாத் அணி 19.2 ஓவரில் 196 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. சாகிப் ஹுசைன் (5) அவுட்டாகாமல் இருந்தார். ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட் கைப்பற்றினார்.
குஜராத்துடன் மோதல்
'எலிமினேட்டர்' போட்டியில் வென்ற ராஜஸ்தான் அணி, நாளை புதிய சண்டிகரில் நடக்கவுள்ள தகுதிச் சுற்று-2ல், தகுதிச் சுற்று-1ல் தோற்ற குஜராத் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, மே 31ல் ஆமதாபாத்தில் நடக்கும் பைனலில் பெங்களூரு அணியுடன் மோதும்.
சிக்சர் மன்னன்
12 சிக்சர் அடித்த ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் லீக் அரங்கில் ஒரு சீசனில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றினார். இம்முறை 15 போட்டியில், 65 சிக்சர் பறக்கவிட்டார். இதற்கு முன், 2012ல் பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 59 சிக்சர் விளாசியது சாதனையாக இருந்தது.
* அதிக முறை, ஒரு இன்னிங்சில் 10+ சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை கெய்லுடன் பகிர்ந்து கொண்டார் வைபவ். இருவரும் தலா 4 முறை இப்படி சாதித்தனர்.
* 'பிளே-ஆப்' போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் (12) விளாசிய வீரர்கள் வரிசையில் வைபவ் முதலிடம். இதற்கு முன், குஜராத் அணியின் சுப்மன் கில் 10 சிக்சர் (2023, எதிர்: மும்பை, இடம்: ஆமதாபாத்) அடித்திருந்தார்.
16 பந்தில்
கிரிக்கெட் லீக் அரங்கில், 'பிளே-ஆப்' போட்டியில் அதிவேக அரைசதம் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை சென்னை வீரர் ரெய்னாவுடன் (2014, எதிர்: பஞ்சாப், இடம்: மும்பை) பகிர்ந்து கொண்டார் வைபவ். இருவரும் தலா 16 பந்தில் அரைசதம் எட்டினர்.
அடுத்த இரு இடங்களில், டெக்கான் அணியின் கில்கிறிஸ்ட் (17 பந்து, எதிர்: டில்லி, 2009, செஞ்சுரியன்), சென்னையின் தோனி (20 பந்து, எதிர்: மும்பை, 2012, பெங்களூரு) உள்ளனர்.
'பவர்-பிளே' நாயகன்
கிரிக்கெட் லீக் அரங்கில், ஒரு சீசனில் 'பவர்-பிளே' ஓவரில் (1-6) அதிக ரன் குவித்த வீரரானார் வைபவ். இம்முறை, 490 ரன் குவித்துள்ளார். இதற்கு முன், 2016ல் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் 467 ரன் எடுத்திருந்தார்.
ரன் மழை
கிரிக்கெட் லீக் அரங்கில், ஒரு சீசனில் அதிக ரன் குவித்த 'அன்கேப்டு பேட்டர்' ஆனார் வைபவ். இம்முறை 15 போட்டியில், 680 ரன் விளாசினார். இதற்கு முன், 2023ல் ராஜஸ்தானின் ஜெய்ஸ்வால் 625 ரன் எடுத்திருந்தார்.
நழுவிய சாதனை
வைபவ் சூர்யவன்ஷி 29 பந்தில் சதமடிக்கும் (97) வாய்ப்பை இழந்தார். ஒருவேளை இவர், 29 பந்தில் சதம் அடித்திருந்தால், கிரிக்கெட் லீக் அரங்கில் அதிவேக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கலாம். தற்போது இச்சாதனை பெங்களூரு அணியின் கெய்ல் (30 பந்து, எதிர்: புனே, 2013) வசம் உள்ளது.