வீடுகளில் மதுபான 'பார்ட்டி' கட்டணம் கிடுகிடு உயர்வு

பெங்களூரு: வீடுகள் மற்றும் தனியார் இடங்களில், ஏற்பாடு செய்ய ப்படும், 'பார்ட்டி'களில், மதுபானம் பயன்படுத்த வழங்கப்படும் பர்மிட் கட்டணத்தை, கலால் துறை இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது.

கலால்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வீடுகள், ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஹால்களில் பிறந்த நாள், திருமண நாள், கெட் டு கெதர் என, பல்வேறு காரணங்களை முன்னிட்டு, பார்ட்டி நடத்தப்படுவது வழக்கம். இதில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு, மதுபானம் வினியோகிக்க விரும்பினால், கலால்துறையிடம் முறைப்படி கட்டணம் செலுத்தி, அனுமதி பெறுவது கட்டாயம்.

இதற்கு முன் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளில், மதுபானம் வழங்கும் பர்மிட்டுக்கு, நாள் ஒன்றுக்கு, 11,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது, தற்போது 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பார்ட்டி ஏற்பாடு செய்யும் பொது மக்கள், பார்ட்டி நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பே, பர்மிட் பெற வேண்டும். ஒருவேளை பார்ட்டி நடப்பதற்கு முதல் நாளன்று, அவசரமாக அனுமதி தேவையென்றால், ' தத்கால்' திட்டத்தின் கீழ், அனுமதி பெற வாய்ப்புள்ளது. இதற்கு நாள் ஒன்றுக்கு, 40,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

வீடுகளில் சிறிய அளவில், பார்ட்டி நடத்துவோருக் கு, கலால் துறை ஒரு சலுகை அளித்துள்ளது. பார்ட்டிகளில், 9 லிட்டர் மதுபானம், 18 லிட்டர் பீர் அல்லது ஒயின் பயன்படுத்தினால் துறையிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்த அளவை தாண்டினால், அனுமதி பெறுவது கட்டாயம் .

இசை கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் ஈவென்டுகள், புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற, வர்த்தக பார்ட்டிகளில் மதுபானம் பயன்படுத்த, நாள் ஒன்றுக்கு, 75,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவசர அனுமதி வேண்டுமானால், 1.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

Advertisement