கார்களுக்கு ஏற்ப எத்தனால் கலப்பு பெட்ரோல்; வருகிறது வாடிக்கையாளரே தேர்வு செய்யும் வசதி

2


புதுடில்லி: பெட்ரோல் பங்குகளில் தங்கள் வாகன இன்ஜினுக்கு ஏற்ற, 'எத்தனால் கலப்பு' பெட்ரோல் ரகங்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

மேற்காசிய போர் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய பெட்ரோலில் எத்தனால் பயன்படுத்துவது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நம் நாட்டில், பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இத்திட்டம் மூலம், 2014, நவ., முதல் 2026, பிப்., வரை நம் நாட்டுக்கு, 1.70 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 8.70 கோடி டன் கார்பன் உமிழ்வும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோலில் 20 சதவீதம் வரை மட்டுமே எத்தனால் கலக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்கு ஓர் ஆண்டுக்கு 1,100 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படுகிறது.

ஆனால் உற்பத்தி 2,000 கோடி லிட்டராக உள்ளது. உபரி எத்தனாலை பயன்படுத்த, 'இ - 22, இ - 25, இ - 30' போன்ற கூடுதல் சதவீத எத்தனால் கலப்பு திட்டங்களை அரசு கொண்டு வர உள்ளது. இவற்றை தனித்தனியே அதற்கேற்ற விலையில் விநியோகிக்க பெட்ரோல் நிலையங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், ஒவ்வொரு பெட்ரோல் ரகத்தின் விபரங்களும், விலையும் பங்குகளில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் வாகன இன்ஜின் திறனுக்கேற்ற பெட்ரோலை தேர்வு செய்யலாம்.

பிரேசில் போன்ற நாடுகள் ஏற்கனவே இத்தகைய கூடுதல் எத்தனால் கலப்பு முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதாக தானிய எத்தனால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சி.கே. ஜெயின் தெரிவித்தார். கூடுதல் எத்தனால் கலப்பால் மைலேஜ் குறையும் என்ற வதந்திகளை மறுத்துள்ள மத்திய அரசு, இது வாகனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement