ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் நகை ‘அபேஸ்’   பெண்ணாடத்தில் துணிகரம் 

பெண்ணாடம், மே 29–

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலுார் மாவட்டம், தளவாய் அடுத்த அயன்தத்தனுாரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் மனைவி தமிழ்ச்செல்வி, 43; இவர் நேற்று மதியம், 1:00 மணியளவில், கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் இருந்து விருத்தாசலம் சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறினார். 

அப்போது, துறையூர் அருகே பஸ் சென்ற போது, பர்சை எடுத்த பார்த்தபோது, அதில் வைத்திருந்த 3 சவரன் நகை காணாததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசில், மதியம் 2:00 மணிக்கு, தமிழ்ச்செல்வி புகார் தெரிவித்தார். ஆனால் நகை காணாமல் போன இடம் துறையூர் என்பதால் பெண்ணாடம் போலீசில் புகார் தெரிவிக்க போலீசார் கூறியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, மாலை 3:00 மணியளவில் தமிழ்ச்செல்வி பெண்ணாடம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து நகை திருடிய மர்மநபர்கள் குறித்தும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் சோதனை செய்தனர்.

ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் மர்மநபர் நகை ‘அபேஸ்’ செய்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement