பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
புதுச்சேரி: பக்ரீத் பண்டிகையையொட்டி, கடற்கரை சாலை காந்தி திடலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை பக்ரீத். இறைவனின் துாதரான இப்ராகிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் 10ம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
பண்டிகையையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில், புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
மேலும், புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள அஹமதியா பள்ளி வாசல், காசிம் சாலை முஹமதியா பள்ளி வாசல், மீரா பள்ளி வாசல், முல்லா வீதி குத்பா பள்ளி வாசல், ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, குருமாம்பேட், காலாப்பட்டு, மூலக்குளம், லாஸ்பேட்டை, பெரியக்கடை, சுல்தான்பேட்டை, வில்லியனுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளி வசால்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.