ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு
கோவை: கொங்குநாடு மருத்துவமனை சார்பில் உலக அவசர சிகிச்சை தினம் கொண்டாடப்பட்டது. அவசர காலங்களில் உயிர்காக்கும் பணியில் துரிதமாக செயல்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை கவுரவிக்கும் வகையில் கார்மல் கார்டன் பள்ளி அரங்கில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவிற்கு பள்ளி முதல்வர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். கொங்குநாடு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராஜு, மருத்துவ இயக்குநர் கார்த்திகேயன் ராஜு, அவசர சிகிச்சைப்பிரிவு தலைவர் ராம் பிரபாகர், அவசர சிகிச்சைப்பிரிவு மூத்த மருத்துவர் அஜித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், அவசர காலச் சிகிச்சையின் போது ஆம்புலன்ஸின் முக்கியத்துவம் மற்றும் ஓட்டுனர்களின் அர்ப்பணிப்புமிக்க பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.