மாநில அரசியல் கட்சிகளின் வருவாய்; ஒரே ஆண்டில் ரூ.1,270 கோடி சரிவு

1

புதுடில்லி: கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், 36 மாநில அரசியல் கட்சிகளின் மொத்த வருவாய், முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் 51 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது; அதேசமயம், அதில், 21 கட்சிகள், தங்கள் வருவாயைவிட அதிக தொகையை செலவிட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி மற்றும் நிதிநிலை குறித்த விபரங்களை தேர்தல் கமிஷனின் தகவல்களை அடிப்படையாக கொண்டு பகுப்பாய்வு செய்து வருகிறது. அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள், அவற்றின் நிதி ஆதாரங்கள் குறித்தும் ஆய்வறிக்கையை ஏ.டி.ஆர்., வெளியிட்டு வருகிறது.

நம் நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 67 கட்சிகளில், 36 மாநில கட்சிகளின் கடந்த நிதியாண்டு வரவு - செலவு குறித்து ஆய்வு செய்து ஏ.டி.ஆர்., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:

தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின்படி, 2024 - 25ல், அங்கீகரிக்கப்பட்ட 36 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் 1,192.94 கோடி ரூபாய். கடந்த 2023 - 24 நிதியாண்டில் இந்த கட்சிகளின் மொத்த வருவாய் 2,463. 17 கோடி ரூபாய். கடந்த நிதியாண்டைவிட 51.57 சதவீதம், அதாவது 1,270.23 கோடி ரூபாய் வருவாய் சரிந்துள்ளது.

எனினும், இந்த 36 கட்சிகள் அறிவித்த மொத்த செலவினம் 1,433.07 கோடி ரூபாய். இது, அவற்றின் மொத்த வருவாயை விட 240.12 கோடி ரூபாய், அதாவது 20 சதவீதம் அதிகம்.

மாநில கட்சிகளில், அதிகபட்சமாக தெலுங்கு தேசம் கட்சி, 228.31 கோடி ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது. இது மொத்த வருவாயில் 19.14 சதவீதம். அடுத்ததாக, திரிணமுல் காங்கிரஸ் 219.35 கோடி ரூபாயுடனும், ஒய்.எஸ்.ஆர். காங்., கட்சி 140.39 கோடி ரூபாயுடனும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

செலவினங்களை பொறுத்தவரை, ஒய்.எஸ்.ஆர்., காங்., அதிகபட்சமாக 340.20 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிஜு ஜனதா தளம் 288.44 கோடி ரூபாயும், திரிணமுல் காங்., 227.59 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளன.

ஒய்.எஸ்.ஆர்., காங்., திரிணமுல் காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ர சமிதி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வருவாயை விட அதிகளவு செலவு செய்துள்ளன.

மொத்தமுள்ள 36 கட்சிகளில், 15 கட்சிகள் செலவிடப்படாத வருவாயை கையிருப்பாக வைத்துள்ளன. இதில், தெலுங்கு தேசம் கட்சி அதிகபட்சமாக 166.98 கோடி ரூபாயை வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிராவின் நவநிர்மாண் சேனா 36.27 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 35.86 கோடி ரூபாயும் வைத்துள்ளன.

பிராந்திய கட்சிகளுக்கு நிதி திரட்டுவதற்கான மிகப்பெரிய ஆதாரமாக தன்னார்வ நன்கொடைகளே தொடர்ந்து இருந்து வருகின்றன. மொத்த வருவாயில், 702.36 கோடி ரூபாய் அதாவது, 58.88 சதவீத தொகை நன்கொடை வாயிலாகவே பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement