87 ஆண்டு கல்விச்சேவையில் ஸ்ரீ மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளி :அரசு நிர்ணயித்த கட்டணத்தைக்கூட பெறாமல் தரமான கல்வி வழங்கும் நிர்வாகம்
திண்டிவனத்தில் 87 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பள்ளியாக துவங்கப்பட்ட ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளி, தற்போது உயர்நிலைப் பள்ளியாக ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த சேவை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
கடந்த 1939ம் ஆண்டு திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில் சிறிய கூரை கொட்டகையில் பெண்கள் ஆரம்பப் பள்ளியாக ராமசாமி அவர்களை நிர்வாகியாக கொண்டு துவங்கப்பட்டது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 1966ம் ஆண்டு திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் கோவிந்தராஜ் என்பவரை நிர்வாகியாக கொண்டு செயல்பட துவங்கியது. அதே ஆண்டில் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து பள்ளியை கே.டி.தேவராஜ் அவர்களை நிர்வாகியாக கொண்டு 1984ம் ஆண்டு முதல் செயல்பட துவங்கியது. இதே ஆண்டில் இருபாலர் பயிலும் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியில் 400 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்றனர்.
நகரின் மையப்பகுதியில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை உயர்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளி ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது.
இதில் ஒன்றாம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை அரசு நிதியுதவிபெறும் பள்ளியாகவும், 9ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை சுயநிதி பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது.
வழக்கமாக அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும். ஆனால், இந்தப் பள்ளியில் மாணவர்கள் யாரும் கல்விக் கட்டணம் செலுத்துவதில்லை. அந்த கட்டணத்தை பள்ளி நிர்வாகமே செலுத்தி வருகின்றது.
இதனால் நகரின் மையப்பகுதியில் கல்விக் கட்டணமில்லாமல் தரமான கல்வியை அளிப்பதால், பெரும்பாலும் ஏழை மாணவர்களே அதிகம் பயின்று வருகின்றனர்.
திண்டிவனத்தில் மற்ற அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கும் நிலையில், கட்டணமில்லாமல் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிப்பதால் அதிகளவில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியைச் சேர்ந்த தமிழாசிரியர் ரங்கநாதன், மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். ஆசிரியை சாம்பவி, ஆசிரியர் செம்பல் விருது பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இதுவரை 14 முறை நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை படைத்துள்ளது.
இதுமட்டுமின்றி பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மேற்படிப்பு படிக்கும் வகையில், அகரம் மற்றும் மாற்றம் பவுண்டேஷன் ஆகிவற்றுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, மேற்படிப்பு செல்வதற்கான உதவிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருவது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. .
பேட்டிகள்...
மேற்படிப்பிற்கான உதவியையும் பள்ளி நிர்வாகம் செய்கிறது நகரத்தில் ஏழ்மையான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிப்பதற்காக கல்விக் கட்டணம் வாங்குவதில்லை. இதனால் அதிகளவிலான ஏழை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், சிறந்த கல்வியையும் தருவதில் மற்ற பள்ளிகளுக்கு முன் உதாரணமாக ஸ்ரீ மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளி உள்ளது. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதேபோல் மாணவர்களின் மேற்படிப்பிற்கு தேவையான உதவிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
-தேவராஜ்
பள்ளி நிர்வாகி
நகர மக்களின் நம்பிக்கையை பெற்ற பள்ளியாக விளங்குகிறது திண்டிவனத்தில் சுதந்திரத்திற்கு முன் துவங்கப்பட்ட இப்பள்ளி தொடர்ந்து 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது. பள்ளியின் நிர்வாகியின் கடின உழைப்புதான் இதற்கு காரணம். நகரத்தில் மாணவர்களுக்கு கல்வி கட்டணமில்லாமல் , கல்வி கற்றுக்கொடுத்து வருவதால் நகர மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பள்ளியாக ஸ்ரீ மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளி விளங்குகிறது.
-கல்கண்டு சுந்தரம்
மளிகை வியாபாரிகள் சங்க தலைவர்.
பள்ளி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் இப்பள்ளியில் ஏழை மாணவர்கள் அதிகமானோர் கல்வி கற்கின்றனர். கட்டணமில்லாமல் கல்வி கற்றுக் கொடுப்பதால், மாணவர்கள் அதிக அளவில் சேர்கின்றனர். பள்ளியில் படித்த பல மாணவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பல முறை நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதனால் பெற்றோர்கள் இந்த பள்ளி மீது நம்பிக்கை வைத்து, தங்கள் பிள்ளைகளை ஆர்வத்துடன் சேர்க்கின்றனர். பள்ளியை நிர்வாகி தேவராஜ், துணைத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.
-பரணிதரன்,
18 வது வார்டு தி.மு.க.,
தனியார் பள்ளிகளுக்கு இணையான பள்ளி இந்த பள்ளியில் முன்னாள் மாணவரான நான், கவுன்சிலராகவும், தற்போது பா.ம.க., மாவட்ட செயலாளராகவும் பதவி வகிக்கின்றேன். நகரத்தில் உள்ள ஏழை மாணவர்கள் அதிகம் பேர் இந்த பள்ளியில் படிக்கின்றனர். குறிப்பாக அரசு நிர்ணியித்த கட்டணத்தை கூட வாங்காமல், மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கற்றுத்தரும் பள்ளி நிர்வாகத்தினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளிக்கு இணையாக நுாறு சதவீதம் தேர்ச்சி கொடுத்து வரும் ஆசிரியர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
-ஜெயராஜ்,
பா.ம.க., மாவட்ட செயலாளர்
மேலும்
-
வாலிபர் மீது தாக்குதல்
-
கால்நடைகள் உயிரிழப்பு சந்தை விலையில் நிவாரணம் அமைச்சரிடம் விவசாயிகள் மனு
-
‘தட்கல்’ மின் திட்டத்தில் மின் இணைப்பு எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
மீஞ்சூரில் மின்வெட்டை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டம்
-
காவல்பட்டியில் சுடுகாடு பிரச்னை சடலத்துடன் மக்கள் போராட்டம்
-
கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பில் நகராட்சி ஊழியர்கள்