டிரம்ப் படத்துடன் கரன்சி வடிவமைப்பு பணி மும்முரம்

வாஷிங்டன்: அமெரிக்காவின், 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பின் உருவம் அச்சிடப்பட்ட புதிய, 250 டாலர் மதிப்புள்ள நோட்டை அறிமுகம் செய்ய அமெரிக்க நிதித் துறை மாதிரி வடிவங்களை தயார் செய்து வருகிறது.

அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் போது எந்த ஒரு அதிபரின் படமும் டாலர் நோட்டில் இடம்பெற்றதில்லை. தற்போதைய சட்டம் அதற்கு அனுமதிக்காததால், பார்லிமென்டில் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை எதிர்த்த கரன்சி அச்சக பிரிவின் இயக்குநர் பாட்ரிசியா சோலிமென் சமீபத்தில் மாற்றப்பட்டார்.

இந்நிலையில், 250 டாலர் மதிப்புள்ள நோட்டின் மாதிரி வடிவங்களை தயாரிக்கும் பணியில் நிதித்துறை ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு வடிவம் இறுதி செய்யப்படும்.

இது குறித்து, அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியதாவது:

அமெரிக்க கரன்சியில் உயிரோடு இருக்கும் நபர் இடம்பெறக் கூடாது என்ற விதியை மாற்றி, அதிபர் டிரம்பின் படத்தை கொண்டு வர பார்லி.,யின் இரு சபைகளிலும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்டால் உடனடியாக பயன்படுத்தும் வகையில், 250 டாலர் மதிப்புள்ள நோட்டின் மாதிரி வடிவங்களை முன்கூட்டியே தயார் செய்து வைக்கும்படி அச்சகப் பிரிவிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். பார்லி., ஒப்புதலுக்கு பின் சட்டத்திற்கு உட்பட்டே இது நடைமுறைபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement