அரசு மருத்துவமனை வாறுகால்களில் கழிவு நீர் தேக்கம் துர்நாற்றம் தாங்க முடியல

விருதுநகர், மே 29 -

விருதுநகர் அரசு மருத்துவமனையின் டூவீலர் பார்க்கிங், வெளி நோயாளிகள் சீட்டு பதியும் இடம், அவசர சிகிச்சை பிரிவுக்கு எதிரே உள்ள வாறுகால், கேண்டீன் கழிவு நீர் செல்லும் வாறுகால்களில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகளை பார்க்க வருபவர்களும் நோயாளிகளாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவமனை 640 படுக்கைகளுடன் திறக்கப்பட்டு 1250 படுக்கைகளாக உயர்த்தப்பட்டு செயல்படுகிறது. ஆனால் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் கழிவறை, குளியலறை சுத்தமின்மையுடன் உள்ளது.

மேலும் நோயாளிகள், அவர்களை உடன் இருந்து பார்த்து கொள்பவர்கள் கழிவறை, குளியலறையை முறையாக பராமரிக்காததால் தொடர்ந்து குழாய்கள், கதவுகள் சேதமாகி யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் எத்தனை முறை சீரமைத்தாலும் மீண்டும், மீண்டும் சேதப்படுத்தப்படுகிறது.

இதற்கிடையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாறுகால்கள் அனைத்தும் வாட்டர் பாட்டில், கேரி பேக்குகளால் நிறைந்து கழிவு நீர் செல்ல முடியாமல் அடைத்துள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

அதிலும் குறிப்பாக டூவீலர் பார்க்கிங், கேட் பகுதியில் போலீசார் அமர்ந்துள்ள இடம், வெளிநோயாளிகள் சீட்டு பதிவு செய்யும் இடம், அவசர சிகிச்சை பிரிவுக்கு எதிரே உள்ள டூவீலர் பார்க்கிங் முழுவதும் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

கேண்டீன்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அரசு மருத்துவமனை காம்பவுண்ட் சுவரை ஒட்டி செல்லும் வாறுகாலில் விழுகிறது. இந்த வாறுகாலை நகராட்சி நிர்வாகம் எப்போதும் சுத்தம் செய்வதில்லை. இதனால் கழிவு நீர் தேங்கி பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியை கடக்கும் வரை வாகன ஓட்டிகள் மூக்கை மூடியே செல்கின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் நோயாளிகளை உடன் இருந்து பார்த்து கொள்பவர்கள், அவர்களை பார்க்க வருபவர்கள் நோயாளிகளாக மாறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.  

எனவே விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து வாறுகால், காம்பவுண்ட் சுவரை சுற்றிய வாறுகால்களை உடனடியாக சுத்தம் செய்து கழிவு நீர் தேக்கத்தை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

 

Advertisement