கிரைம் கார்னர்: சென்னை

லாட்டரி விற்றவர் சிக்கினார்

மயிலாப்பூர்: மயிலாப்பூர், சாய்பாபா கோவில் அருகே சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த, மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையைச் சேர்ந்த நாகராஜன், 53 என்பவரை, போலீசார் நேற்று கையும் களவுமாக கைது செய்தனர். இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட நான்கு வழக்குகள் ஏற்கனவே உள்ளன.



ரவுடியிசத்தில் ஈடுபட்ட 3 பேருக்கு 'கம்பி'

ராயபுரம்: காசிமேடு, சிங்காரவேலர் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ், 26. இரண்டு நாட்களுக்கு முன், ராயபுரம், ஷேக் மேஸ்திரி தெரு வழியாக நடந்து சென்றார். அங்கு நின்றிருந்த வாலிபர்கள், ஆகாஷை வழிமறித்து, வீண் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, 'இனி, ஏரியாவில் நாங்க தான் கெத்து எனக்கூறி, மறைத்து வைத்திருந்த இரும்பு கட்டரால் தலையில் தாக்கி சென்றனர். தலையில் காயமடைந்த ஆகாஷ், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விசாரித்த ராயபுரம் போலீசார், காசிமேடைச் சேர்ந்த ராகுல், 26, தாமோதரன், 29, சஞ்சய், 22, ஆகியோரை கைது செய்தனர்.



பஸ்சில் முதியவரின் நகைகள் திருட்டு

படப்பை: படப்பை, திருத்தவேலியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65. இவர், உறவினர்களுடன் கிருஷ்ணகிரிக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் தாம்பரத்திற்கான அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.படப்பை அருகே வந்தபோது, அவரது பையில் வைத்திருந்த 9 சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து, படப்பை காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார். கிருஷ்ணகிரியில் சம்பவம் நடந்ததால், அங்கு புகார் அளிக்குமாறு போலீசார், அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.



சைக்கிள் திருடிய நபருக்கு வலை

ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பரத் வேல், 40; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இவரது மகனின் 'கியர்' சைக்கிள் திருடு போனது. அயப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், இரு தினங்களுக்கு முன் பரத்வேலின் வீட்டிற்கு வேலை செய்ய வந்த நபர், சைக்கிளை திருடிச் செல்வது தெரிந்தது. அண்ணனுாரில் உள்ள காயலான் கடையில் 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சைக்கிளை போலீசார் மீட்டனர். மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement