அம்மா உணவகத்தின் கூரை, சுற்றுச்சுவர் சேதம் :எம்.எல்.ஏ., ஆய்வு; பணிகள் துவங்கல

விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் செயல்படும் அம்மா உணவகத்தின் கூரை சேதமாகி சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. சுற்றுச்சுவரில் சிமெண்ட் பூச்சுகள் இல்லாமல் செங்கல் கட்டுமானம் அப்படியே தெரிகிறது. எம்.எல்.ஏ., செல்வம் ஆய்வு செய்தும், நகராட்சி நிர்வாகம் இதுவரை சீரமைப்பு பணிகளை துவங்காமல் உள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் நகராட்சி கட்டடத்தில் அம்மா உணவகம் செயல்படுகிறது. இந்த கட்டடம் முறையாக பராமரிக்காததால் தற்போது கூரையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது.

மேலும் சுற்றுச்சுவரில் சிமெண்ட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து செங்கல் கட்டுமானம் மட்டுமே உள்ளது. இதனால் கட்டடம் உறுதித்தன்மை இல்லாமல் வலுவிழக்கும் நிலை உருவாகியுள்ளது. இங்கு மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஆதரவற்ற வயதானவர்கள் உள்பட பலரும் தினமும் உணவு வாங்கி உட்கொள்கின்றனர்.

இந்த அம்மா உணவகத்தின் செயல்பாடு, மகப்பேறு பிரிவுகளில் எம்.எல்.ஏ., செல்வம் மே 20ல் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அம்மா உணவகத்திற்கு தேவையான சீரமைப்பு பணிகள் விரைந்து செய்ய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால் ஆய்வு முடிந்து ஒரு வாரத்தை கடந்தும் இதுவரை அம்மா உணவகத்தில் எவ்வித சீரமைப்பு பணிகளும் துவங்கப்படவில்லை. ஆய்வுக்கு முன் எப்படி கட்டடம், சுற்றுச்சுவர் இருந்ததோ, அப்படியே தற்போது வரை உள்ளது. எம்.எல்.ஏ., செல்வத்தின் ஆய்வு வெறும் கண் துடைப்பு நடவடிக்கையா என நோயாளிகளின் உறவினர்கள், மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

Advertisement