எப்போது ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் மருந்தகம் திறப்பு; டெண்டர் அறிவித்தும் யாரும் வராத அவலம்

காரைக்குடி:காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் தொடங்குவதற்கு பலமுறை ரயில்வே துறை சார்பில் டெண்டர் அறிவித்தும், யாரும் முன் வராததால் மக்கள் மருந்தகம் திறப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 13.57 கோடி மதிப்பீட்டில், காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் புதுப்பிப்பு பணிகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து, ரயில்வே ஸ்டேஷன்களில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து வழங்கும் விதமாக பிரதமர் பாரதிய மக்கள் மருந்தகம் அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 50 முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்து கிடைக்கும். இத்திட்டம் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு தற்போது, திருச்சி தஞ்சாவூர் திண்டுக்கல் ஈரோடு உட்பட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் தொடங்கப்பட்டுள்ளது.

அதே போல் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனிலும் மக்கள் மருந்தகம் தொடங்குவதற்கு கட்டுமான பணிகள் நடந்தது. பணிகள் முடிவுற்று மருந்தகம் அமைப்பதற்கு, ரயில்வே துறை இதுவரை பலமுறை ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் மருந்தகம் நடத்துவதற்கு யாரும் ஆர்வம் காட்டாததால், இதுவரை மருந்தகம் திறக்கப்படாமல் உள்ளது.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்:

காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் அமைப்பதற்கு கட்டட பணிகள் முடிக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டது. பார்மசிஸ்ட் தகுதி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவரை 6 முறை டெண்டர் விடுத்தும் யாரும் மருந்தகம் நடத்த முன் வரவில்லை.

Advertisement