வைபவ் சூர்யவன்ஷி தேர்வு: இந்திய உத்தேச அணியில்

புதுடில்லி: ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார்.

ஜப்பானில், ஆசிய விளையாட்டு நடக்கவுள்ளது. இதில் 4வது முறையாக (2010, 2014, 2022, 2026) கிரிக்கெட் போட்டி ('டி-20') இடம் பெற்றுள்ளது. இம்முறை இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்குகின்றன.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், 30 பேர் கொண்ட இந்திய உத்தேச வீரர்கள் பட்டியல், இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் (ஐ.ஓ.ஏ.,) வழங்கப்பட்டது. இதில், 'டி-20' போட்டி கேப்டன் சூர்யகுமார் யாதவ், டெஸ்ட், ஒருநாள் போட்டி கேப்டன் சுப்மன் கில் இடம் பெறவில்லை. இவர்கள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 ஒருநாள், 5 'டி-20' போட்டிகள் கொண்ட தொடருக்கு (செப். 27 - அக். 17) தேர்வு செய்யப்படலாம்.

கிரிக்கெட் லீக் 19வது சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்ஷி (776 ரன், 16 போட்டி, 'ஸ்டிரைக் ரேட்' 237.31) உத்தேச அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டுக்கு ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம்.

இந்திய உத்தேச அணி: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ஆயுஷ் படோனி, ஹர்ஷ் துபே, துருவ் ஜுரெல், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், ஷாபாஷ் அகமது, ஷிவம் துபே, விப்ராஜ் நிகாம், ஹர்ஷித் ராணா, யாஷ் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.
விரைவில் ஆசிய விளையாட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்படலாம்.

Advertisement