அமோக வரவேற்பு! பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்தததற்கு...: பின்னலாடை துறையினருக்கு நிம்மதி

3

திருப்பூர்: மத்திய அரசு, பருத்தி பஞ்சு இறக்குமதிக்கான வரியை, தற்காலிகமாக ரத்து செய்துள்ளதற்கு, சைமா உள்ளிட்ட திருப்பூர் தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

பஞ்சு விலை உயர்வு காரணமாக, நுால் விலையும் கடுமையாக உயர்ந்தது. அதாவது, கடந்த மூன்று மாதங்களில், கிலோவுக்கு, 50 ரூபாய் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. எனவே, பஞ்சு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பஞ்சு இறக்குமதிக்கான தடையை நீக்க வேண்டுமென, அனைத்து தொழில்துறையினரும், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோரது தலைமையிலான, கூட்டுக்குழுவினர், கடந்த இருவாரங்களுக்கு முன், டில்லி சென்று, துணை ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர்.

ஒட்டுமொத்த ஜவுளி தொழிலை பாதுகாக்கும் வகையில், பஞ்சு இறக்குமதிக்கான வரி, 11 சதவீதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், மத்திய அரசு, நாளை (ஜூன் 1) முதல் அக்., 31ம் தேதி வரை, பஞ்சு இறக்குமதிக்கான சுங்கவரி, 11 சதவீதம் ரத்து செய்யப்படுமென அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்புக்கு, ஒட்டுமொத்த தொழில்துறையினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

புதிய வாய்ப்புகள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்:

ஜவுளித் துறை கோரிக்கையை ஏற்று பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை தள்ளுபடி செய்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. தொழிலின் தற்போதைய சூழலில், இந்த அறிவிப்பு நிச்சயம் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு கைகொடுக்கும். இதனால், புதிய ஆர்டர்களை வசப்படுத்துவது சற்று எளிதாகி உள்ளது. பருத்தி மீதான தற்காலிக வரிவிலக்கு ஜவுளி, ஆடைத்துறை உற்பத்தி செலவுகளை குறைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.


மிகப்பெரிய ஆதரவு


தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் சண்முகசுந்தரம்:
தற்காலிகமான வரி விலக்கு, மூலப்பொருள் செலவைக் குறைத்து, பருத்தி கிடைப்பதை உறுதி செய்யும். திருப்பூர் போன்ற ஜவுளி மையங்களை வலுப்படுத்துவதன் மூலம் ஜவுளி மற்றும் ஸ்பின்னிங் தொழில்துறைக்கு பெரும் ஆதரவாக இருக்கும்.

இந்த சுங்க வரி விலக்கு, 'சைமா' முன்னெடுப்பில், ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் மற்றும் கூட்டுக்குழுவின் தொடர்ச்சியான முயற்சிக்கும் கிடைத்த பலன். நிவாரணம் வழங்கிய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பருத்தி இறக்குமதி சுங்க வரியை நீக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் விஜய்க்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


 திருப்பூருக்கு புது நம்பிக்கை


தொழில் துறை ஆலோசகர் ஜெய்பிரகாஷ்:
இது திருப்பூருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம். திருப்பூர், தற்போது பருத்தி விலை உயர்வு, மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் சர்வதேச போட்டி போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த அறிவிப்பால், அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தரமான பருத்தியை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். இதனால், மில்களில் உற்பத்தி செலவு குறையும். நுால், துணி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கு அதன் பயன் கிடைக்கும். ஏற்றுமதியாளர்களிள் போட்டித் திறன் கூடும்.

தற்போது நிலைத்தன்மை, மறுசுழற்சி ஆடை உற்பத்தி, தடமறிதல் போன்ற புதிய துறைகளில் கவனம் செலுத்தி நிறுவனங்கள் புதுமை மற்றும் ஆராய்ச்சிகளில் கூடுதல் முதலீடு செய்யலாம்.

அதே நேரம், உள்நாட்டு பருத்தி விவசாயிகள் நலனும் பாதுகாக்க வேண்டும். தொழில்துறையின் வளர்ச்சியும், விவசாயிகளின் வருமானமும் சமநிலையுடன் முன்னேறுவதே நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது. பருத்தி இறக்குமதி வரி விலக்கு என்பது திருப்பூர் ஜவுளித் துறைக்கு ஒரு குறுகிய கால நிவாரணம் மட்டுமல்ல. உலக சந்தையில் மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக அமையும்.


Advertisement