வைகாசி விசாக பிரம்மோற்சவத்தில் திருக்கல்யாண வைபவம் விமரிசை

சென்னை:வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோத்சவத்தின் முக்கிய நாளான நேற்று, திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.


வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகமான நேற்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு, பள்ளியறை பூஜைகள் நடந்தன. பின், சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து காப்பு களைதல் நிகழ்வும் நடந்தது.

நேற்று காலை சண்முகர் விதி, தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பின், யாகசாலை பூஜைகள் துவங்கி, மகா பூர்ணாஹுதி, கடப்புறப்பாடு, சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.

முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம், நேற்று மாலை துவங்கியது. சீர்வரிசை தட்டு வைத்து, யஜமான சங்கல்ப நிகழ்வு நடந்தது. பின், கலச பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூணுால் மாற்றி, காப்பு கட்டும் வைபவம் நடந்தது.

யாகசாலை வளர்த்து ஹோமங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக திருக்கல்யான வைபவம் விமரிசையாக நடந்தது. மாலை மாற்றுதல், பாலும், பழமும் வழங்கும் நிகழ்வு நடந்தது. பின், திருமாங்கல்ய பூஜை நடந்தது.

தொடர்ந்து திருமாங்கல்ய தாரணம், பொறியிடுதல் நிகழ்வு, கூட்டுபிரார்த்தனை, மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகப் பெருமானின் அருளைப் பெற்றனர்.

Advertisement