அரசு பங்களாவை காலி செய்ய லாலு மனைவி ரப்ரி மறுப்பு; போலீஸ் உதவியுடன் காலி செய்ய பீஹார் அரசு முனைப்பு

25


புதுடில்லி: முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி அரசு பங்களாவை காலி செய்ய மறுத்த நிலையில் போலீஸ் உதவியுடன் காலி செய்வதற்கு பீஹார் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

பீஹாரில் முன்னாள் முதல்வர்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களாக்களில், அவர்கள் தங்கள் ஆயுள் முழுதும் தங்கியிருக்கலாம் என்ற சட்டம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ரப்ரி தேவியை, பாட்னாவின் சர்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவில் இருந்து காலி செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான நோட்டீஸ் சமீபத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக பாட்னாவில் உள்ள 10, சர்குலர் ரோடு அரசு பங்களாவில் ரப்ரி தேவி குடும்பத்தினர் வசித்த வரும் நிலையில் தற்போது பாஜ தலைமையிலான புதிய அரசு, இந்த இல்லத்தை மாநில அமைச்சர் நந்த கிஷோர் ராமுக்கு ஒதுக்கி உத்தரவிட்டது. ரப்ரி தேவியை பங்களாவை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியும் அவர் அதை காலி செய்ய மறுத்து வருகிறார். பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரப்ரி தேவி, தான் வீட்டை காலி செய்யப்போவதில்லை என முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு சவால் விடுத்த நிலையில், அந்த பங்களாவிற்கு வெளியே ஒரு பெரிய அளவிலான போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

ரப்ரி தேவிக்கு அரசு பங்காளவை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. முந்தைய நிதிஷ் குமார் அரசின் போது, ​​அவருக்கு ஒதுக்கப்பட்ட புதிய வீட்டிற்கு குடிபெயருமாறு ஒரு அறிவிப்பு அனுப்பப்பட்டது.இருப்பினும், அவர் அந்த உத்தரவுக்கு இணங்கவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நந்த கிஷோர் ராம் மாநில பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவருக்கு தான் ரப்ரி தேவி தங்கியிருக்கும் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர் நிருபர்களிடம் கூறுகையில், "புதிய அரசு தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பங்களாவைக் காலி செய்ய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பங்களா ஒரு தனிப்பட்ட சொத்து அல்ல. ரப்ரி தேவிக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட புதிய வீட்டிற்கு அவர் குடிபெயர வேண்டும்" என்றார். பீஹார் சட்டசபை சபாநாயகர் பிரேம் குமாரும் அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்ததோடு, அவையின் ஒவ்வொரு உறுப்பினரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

Advertisement