அஞ்சூரம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

மேல்மருவத்துார்: சோத்துப்பாக்கம் அஞ்சூரம்மன் கோவிலில், நேற்று வைகாசி திருவிழா விமரிசையாக நடந்தது.

மேல்மருவத்துார் அருகே சோத்துப்பாக்கம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற அஞ்சூரம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது.

இதையொட்டி, கோவில் மற்றும் கிராம வீதிகள் வண்ணவிளக்குகள் மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இரு நாட்களுக்கு முன், அஞ்சூரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க, கிராம மக்கள் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்களால் அஞ்சூரம்மனுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், திருமணம் ஆகாதவர்கள் பங்கேற்று, தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டி அம்மனை மனம் உருக வணங்கினர்.

பின், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். பிரதான நிகழ்வான தேர்த்திருவிழா, நேற்று மாலை நடந்தது.

இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அஞ்சூரம்மன், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஜி.எஸ்.டி., சாலை பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தேர் நிறுத்தப்பட்டதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க மேல்மருவத்துார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை, கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement