சிறுவானுாரில் நள்ளிரவில் தொடர் மின்வெட்டு: திருப்பதி நெடுஞ்சாலையில் மக்கள் மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், நள்ளிரவில் ஏற்பட்ட மின்வெட்டால் ஆத்திரமடைந்த மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் அடுத்துள்ள சிறுவானுார் மற்றும் சிறுவானுார்கண்டிகை பகுதிகளில், 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, இரவு நேரங்களில் அறிவிப்பில்லாமல் அடிக்கடி தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இது குறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணியளவில், வழக்கம்போல் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், சமாதான பேச்சு நடத்தினர். பின், மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, மின் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அதன்பின், மின் இணைப்பு சீரமைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு பின் மின்சாரம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement