புதிய படைப்புகளை கண்டுபிடிப்பது இந்தியாவின்... மரபணுவில் உள்ளது! சவால்களுக்கு தீர்வு வழங்கும் நாடாக விளங்குகிறது பிரான்ஸ் நாட்டு மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

1

நீஸ்: “புதிய படைப்புகளை கண்டுபிடிப்பது என்பது இந்தியாவின் மரபணுவில் ஊறி கிடக்கிறது. தீர்வுகளை பெறும் நுகர்வோராக இல்லாமல், உலகளாவிய சவால்களுக்கு தீர்வு வழங்கும் நாடாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.



ஐரோப்பிய நாடான பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சென்றுள்ளார். டில்லியில் இருந்து நேற்று முன்தினம் சிறப்பு விமானம் வாயிலாக புறப்பட்ட அவர், முதலில் பிரான்ஸ் நாட்டில் உள்ள நீஸ் நகருக்கு சென்றார். விமான நிலையத்தில், அந்நாட்டு அமைச்சர்கள் எட்வர்ட் ஜெப்ரே, பிலிப்பாப்டிஸ்ட் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர்.



பின், அங்குள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற மோடிக்கு, நீஸ் நகரில் உள்ள இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆடல், பாடலுடன் நடத்தப்பட்ட அவர்களின் கலை நிகழ்ச்சியை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கண்டு ரசித்தார். நீஸ் நகரில், பிரதமர் மோடியை நேற்று வரவேற்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கட்டியணைத்து வரவேற்றார்.

பின், 'பாரத் இன்னோவேட்ஸ்' என்ற புத்தாக்க மாநாட்டை, அவருடன் இணைந்து மோடி தொடங்கி வைத்தார். பிரான்சில் உள்ள பல்வேறு 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே தொலைநோக்கு பார்வை கொண்ட உறவு உள்ளது. இது, புதுமை மற்றும் உத்வேகத்தின் உறவாக உள்ளது. இரு நாட்டு தலைவர்களும் இணைந்து புதிய முயற்சிகளை தொடங்கி, புதிய யோசனைகளுக்கு வழிகாட்டி, உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.

'பாரத் இன்னோவேட்ஸ்' என்ற இந்த தளம், இந்திய திறமையாளர்களுக்கும், ஐரோப்பிய மூலதனத்திற்கும் இடையே ஒரு பாலத்தை அமைக்கிறது. இளம் இந்திய சிந்தனையாளர்கள், ஐரோப்பிய நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவில், தற்போது ஒரு புத்தொழில் புரட்சி நடந்து வருகிறது. இதில், இந்திய இளைஞர்கள் ஒரு புதிய மனநிலையுடன், மனிதகுலத்தின் நன்மைக்காக பிரச்னைகளுக்கு தீர்வுளை கண்டறிந்து வருகின்றனர்.

இந்தியா, தீர்வுகளை பெறும் நுகர்வோராக இல்லாமல், உலகளவிலான சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் நாடாக உருவெடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தன் அறிவாலும், புத்தாக்கத்தாலும் உலகிற்கு புதிய திசையை இந்தியா காட்டியுள்ளது.

கணிதம் முதல் வானியல் வரை, மருத்துவம் முதல் யோகா வரை, இந்தியாவின் பங்களிப்பு ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பது என்பது இந்தியாவின் மரபணுவிலேயே உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய 'ஸ்டார்ட் அப்' சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு துறையும், புத்தாக்கத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான நூற்றுக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் அற்புதமான பணிகளை செய்து வருகின்றன. சமீபத்தில், இந்தியாவில் அணுசக்தி துறையிலும் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த சீர்திருத்த தொடர் ஓட்டம் நிற்காது; தொடர்ந்து பாய்ந்து கொண்டே இருக்கும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, உலகம் இந்தியாவை தொழில்நுட்பத்தை ஏற்கும் நுகர்வு நாடாக பார்த்தது. இன்று, இந்தியா ஒரு தொழில்நுட்ப வழங்குனராக உருவெடுத்து வருகிறது. இந்தியா உருவாக்கும் புத்தாக்கங்கள், அது வழங்கும் தீர்வுகள் எதுவாக இருந்தாலும், அவற்றால் மனிதகுலத்தின் பெரும்பகுதி பயனடைகிறது. இங்குள்ள முதலீட்டாளர்களும், இந்தியாவில் உள்ள 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.



இவ்வாறு அவர் பேசினார்.





@block_B@ இம்மானுவேல் பாராட்டு மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசியதாவது: இந்தியா புதுமைகளின் தேசமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம் போன்ற முக்கிய துறைகளில், இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே உண்மையான கூட்டாண்மை உள்ளது. சிறிய அணு உலைகள் உட்பட சிவில் அணுசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களையும், ஆராய்ச்சி முயற்சிகளையும் உலக அரங்கிற்கு விரைவுப்படுத்தும் நோக்கில் 'பாரத் இன்னோவேட்ஸ்' வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.block_B

Advertisement