சாலையில் தடுப்பு வேலி இல்லாததால் வாகனங்கள் பள்ளத்தில் விழும் அபாயம்

சேத்தியாத்தோப்பு: சாலையில் தடுப்பு வேலி இல்லாததால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகும் அ பாயம் ஏற்பட்டுள்ளது.

சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு முதல் பின்னலுார் வரை, சென்னை - கும்பகோணம் வாய்க்கால் கரை உள்ள சாலையில் நாள்தோறும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.

பின்னலுார் வாலாஜா ஏரி மற்றும் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு தண்ணீர் பாசனத்திற்கு செல்லும் வாய்க்கால்கரையில், குறுக்குரோடு முதல் பின்னலுார் வளைவு வரை, சாலையோர தடுப்பு வேலி இல்லை.

சாலையில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் கனரக வாகனங்கள் எதிர் வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கும்போது வாய்க்கால் 20 அடி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.

தற்போது வாய்க்கால் முழுவதும் துார்வாரி அகலப்படுத்தி உள்ள நிலையில் சாலையோர மரங்கள் ஏதும் இல்லததால் மண் சரிவு ஏற்பட்டு வாகனங்கள் பள்ளத்தில் இறங்கும் அபாயமும் உள்ளது.

இந்த சாலையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எதிர் வரும் கனரக வாகனங்களுக்காக ஓரத்தில் செல்லும் போது வாய்க்காலில் விழுந்து விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.

குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில் தடுப்பு வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement