மலை காய்கறி விதைப்பு பணி: விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி:நீலகிரியில், ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை சாகுபடியும், சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. அடுத்த ஒரு சில நாட்களில் மழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விவசாயிகள் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக நிலத்தை சீர் செய்து டிராக்டரில் உழவு செய்யும் பணியை தொடர்ந்து, தற்போது தோட்டத்தில் விதைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.



விவசாயிகள் கூறியதாவது, ' நீலகிரி மாவட்டத்தில் கார் போகம், கடை போகம், நீர் போகம் என 3 பருவ காலங்களில் மலை காய்கறிகள் சாகுபடி பணிகள் நடைபெறும். இந்த ஆண்டு மழை இல்லாததால் விவசாயப் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் அடுத்த ஒரு சில நாட்களில் மழை தீவிரமடையும் என்ற நம்பிக்கையில் விவசாயத் தோட்டங்களில் மலை காய்கறி விதைகள் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.' என்றனர்.







Advertisement