பாசன வாய்க்கால் துார் வாரும் பணி தீவிரம்
திட்டக்குடி, ஜூன் 3–
திட்டக்குடி அருகே பாசன கிளை மற்றும் கன்னி வாய்க்கால் துார் வாரும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன வாய்க்கால் மூலம், 24 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இங்குள்ள விளைநிலங்களுக்கு செல்லும் பாசன கிளை மற்றும் கன்னி வாய்க்கால் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்தன. சேதமடைந்த வாய்க்கால்களை சீரமைக்கக்கோரி, 10 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, 80 கிலோ மீட்டர் துாரத்திற்கு 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேளாண் பொறியியல் துறை சார்பில் வையங்குடி, சாத்தநத்தம் பகுதிகளில் வாய்க்கால் துார் வாரும் பணிகள் நடக்கிறது. இப்பணியை விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று பார்வையிட்டனர்.
அப்போது, வேளாண் பொறியியல் துறையினரிடம், பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்க வேண்டும் எனவும், எவ்வித பாரபட்சமின்றி வாய்க்கால் துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.