எங்கள் கிராமத்திலேயே வருமான வரி கட்டும் முதல் பெண் நான்!
பாரம்பரிய அரிசி, சிறுதானிய மாவு மற்றும் மசாலா பொடிகளை தயாரித்து விற்பனை செய்து வரும், கடலுார் மாவட்டம், சோழத்தரத்தை சேர்ந்த, 40 வயது பெண் சத்யா:
எங்களுடையது விவசாய குடும்பம்; நான் பி.காம்., முடித்துள்ளேன். கணவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தையல் கற்று, வீட்டில் இருந்தபடியே அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு துணிகள் தைத்துக் கொடுத்ததில் மாதம், 30,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்தது.
தையல் தொழிலில் பெண்கள், 35 வயதிற்கு மேல் இருப்பது சிரமம் தான். அதனால், வீட்டில் இருந்தபடியே வேறு தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசித்து வந்தேன். 10,000 ரூபாய் முதலீட்டில், ஈரோட்டில் இருந்து மஞ்சளும், விருதுநகரில் இருந்து மிளகாய் வத்தலும் வாங்கி, காய வைத்து பொடியாக்கி, பாக்கெட் போட்டு விற்க ஆரம்பித்தேன்; கிலோவுக்கு, 200 ரூபாய் லாபம் கிடைத்தது.
எங்கள் ஊரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று, விவசாயிகளை சந்தித்து தரமான சிறுதானியங்களை கொள்முதல் செய்து, வீட்டிலேயே தோசை மாவு, இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்தேன். வங்கியில் கடன் பெற்று, இயந்திரங்கள் வாங்கி, 'சத்யா புட்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் துவக்கி, தொழிலை விரிவுபடுத்தினேன்; உணவு தரச்சான்றிதழ் வாங்கி, முறையாக பதிவு செய்தேன்.
ஆரம்பத்தில் சில மாதங்கள் வருமானமே வரவில்லை; செலவு கையை மீறி போனது. 'தேவையில்லாத வேலை' என்று பலரும் என் நம்பிக்கையை உடைக்க பார்த்தனர். ஆனால், நான் மாற்று வழியை யோசித்தேன். 'யார் வேண்டுமானாலும் எங்கள் இயந்திரங்களை கட்டணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று நடைமுறைப்படுத்தினேன்.
தமிழக அரசு நடத்திய மதிப்பு கூட்டல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, சிறுதானியங்களில் மதிப்பு கூட்டும் முறைகளை கற்றுக் கொண்டேன். 15 வகையான மாவு வகைகள், பானங்கள் தயாரிக்கும் பொடி வகைகள் என, பொருட்களின் எண்ணிக்கையை அதிகரித்தேன். எங்கள் ஊரிலேயே கடையை வாடகைக்கு எடுத்து, வியாபாரம் செய்து வருகிறேன். இப்போது, சமூக வலைதளம் வாயிலாகவும், 'ஆர்டர்'கள் வருகின்றன.
தற்போது, 50 ரகங்களில் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். 250 கிலோ பொருட்கள் விற்பனை வாயிலாக, மாதம் 3 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. எங்கள் ஊரிலேயே அதிகம் சம்பாதிக்கும் பெண் நான்; வருமான வரி கட்டும் முதல் பெண்ணும் நான் தான்.
பயத்தையும், விமர்சனங்களையும் ஒதுக்கி, உழைப்பை மட்டும் நம்புங்கள்; அது உங்களை உயரத்தில் வைக்கும்.
தொடர்புக்கு: 99529 29201, 99413 93749
***
இதுபோல லஞ்ச லாவண்யங்கள் தொடருவதை பார்த்தால், இப்பொழுதுள்ள ஆட்சி தமிழக வெற்றிக் கழக ஆட்சியா, அல்லது தமிழகத்தை விளங்காமல் செய்யும் தமிழக வெட்டி கழகமா... என்று தோன்றவைக்கிறது.