மீன்கடை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
தொண்டி: தொண்டி–வட்டாணம் ரோட்டோரம் மீன்கடைகள் வரிசையாக இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. தொண்டி பகுதி மக்களுக்கு மிக முக்கியமான போக்குவரத்து சாலையாக கிழக்கு கடற்கரை சாலை திகழ்கிறது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள், கார்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் தொண்டியில் இருந்து வட்டாணம் செல்லும் சாலையில் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே ஏராளமான மீன் கடைகள் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மீன் வாங்க கூட்டமாக செல்பவர்கள் தங்களது டூவீலர்கள் மற்றும் கார்களை ரோட்டோரத்தில் கண்டபடி நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் மீன் கடைகளை முறைப்படுத்தி இடையூறு இல்லாத மாற்று இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
––