சிவகங்கையில் கூட்டுறவு வங்கி கட்டுமான பணி முடக்கம்    

சிவகங்கை, ஜூன் 4-சிவகங்கையில் கிடப்பில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டடம், மத்திய கூட்டுறவு வங்கி கட்டட பணியை விரைவுபடுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சி பணி, பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சராக பிரபுவை நியமித்துள்ளது. இம்மாவட்டத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை துரிதப்படுத்தி, செயல்பாட்டிற்கு கொண்டுவர அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2025 ம் ஆண்டு ஜன., 22 அன்று சிவகங்கையில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஸ்டாலின், இங்கு ரூ.89 கோடியில் கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் என அறிவித்தார். இதற்காக மருதுபாண்டியர் நகர் குடியிருப்பில் இடத்தை தேர்வு செய்துள்ளனர். ஏற்கனவே 1985 ம் ஆண்டில் கட்டிய கலெக்டர் அலுவலக கட்டடம் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்த இந்த அலுவலகத்தில் அலுவலர்கள் பணிபுரியவே அஞ்சும் நிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து ஒன்றரை ஆண்டு ஆன நிலையிலும் கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டடத்திற்கான நிர்வாக அனுமதியை கூட கடந்த அரசு வழங்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில் உள்ளது. * கிடப்பில் கூட்டுறவு வங்கி புதிய கட்டடம் : கூட்டுறவு துறையின் கீழ் சிவகங்கை காந்தி வீதியில் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்திற்கென தரை மற்றும் மேல்தளத்துடன் கூடிய கட்டடம் கட்ட ரூ.3.28 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் பணியை துவக்கி வைத்தார். இக்கட்டட பணியை ஆய்வு செய்த மதுரை தியாகராஜர் கல்லுாரி பொறியியல் பிரிவு பேராசிரியர்கள், மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக கட்டட முதற்கட்ட கட்டுமான பணி தரமின்றியும், உரிய அளவில் சிமென்ட் கலவைகள் பயன்படுத்தாமல் கட்டி அரசு நிதியை வீணடித்து விட்டதாக மத்திய கூட்டுறவு வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் 45 சதவீத கட்டுமான பணிகளை முடிக்காத ஒப்பந்தாதரருக்கு முதற்கட்ட நிதியை விடுவிக்க முடியாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இதனால் ஒன்றரை ஆண்டாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக கட்டுமான பணி கிடப்பில் உள்ளது. இது போன்று சிவகங்கையில் முடங்கியே கிடக்கும் இது போன்ற வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து, துரிதப்படுத்த அமைச்சர் பிரபு அக்கறை செலுத்த வேண்டும். ////

Advertisement