எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 10,000 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2

புதுடில்லி: மத்திய கிழக்கு போரால் விமான எரிபொருள் விலை 2.5 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி வட்டியில்லா கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.39,290 கோடி மதிப்பில் 6 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. மத்திய கிழக்கு போரால் விமான எரிபொருள் விலை 2.5 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி நிதி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. எரிபொருள் நிறுவனங்களுக்கு வட்டி இல்லாத முன்பணமாக இந்த நிதி வழங்கப்படும்.

டில்லி-என்சிஆர் பகுதியில் இயங்கி வரும் பழைய லாரிகள் மற்றும் பஸ்களை அகற்றிவிட்டு, அவற்றிற்குப் பதிலாகப் புதிய சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த திட்டத்திற்காக, அடுத்த 2 ஆண்டுகளில் 9,585 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:

விமான போக்குவரத்தில் உள்நாட்டுப் பயணிகள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு விரும்பியது. நடுத்தர வர்க்கத்தினருக்கு விமானப் பயணம் ஒரு முக்கியப் போக்குவரத்து முறையாக மாறியுள்ளது; தற்போது பல நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வழக்கமாக விமானம் மூலம் பயணம் செய்கின்றன.

கட்டணங்களில் ஏற்படும் கடும் உயர்வுகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு மத்திய அரசு கட்டணம் நிர்ணயம் செய்து இருந்தது. இந்த நடவடிக்கை உள்நாட்டு விமான நிறுவனங்களின் செயல்பாடுகளை நிலைப்படுத்த உதவியபோதிலும், எண்ணெய் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தது.

இதனால் ரூ.10,000 கோடி நிதி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச விமானச் சேவைகளை இயக்கும் இந்திய விமான நிறுவனங்கள் மேற்காசிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணத்தினால் பல சமயங்களில் நீண்ட வழித்தடங்களில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது அவற்றின் செயல்பாட்டுச் செலவுகளை அதிகரிப்பதுடன், விமானப் போக்குவரத்தையும் பாதிக்கிறது. இந்த நடவடிக்கை, அத்தகைய சவால்களில் சிலவற்றைத் தீர்க்கவும், ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Advertisement