நிழற்குடையை தள்ளி வைக்க அதிகாரிகள் முடிவு
சென்னை:'வீட்டு மனைகள் முன் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை இடம் மாற்றம் செய்ய முடியாது; சற்று தள்ளி வைக்கப்படும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொளத்துார் பூம்புகார் நகர் முதல் பிரதான சாலையில், தனி நபருக்கு சொந்தமான மனை முன், மாநகராட்சி சார்பில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மனையின் உரிமையாளரால், அங்கு வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று, சென்னை புறநகர், விரிவாக்க பகுதிகளில் உள்ளது குறித்து, நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பூம்புகார் நகர் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையை ஆய்வு செய்தபின், மாநகராட்சி மண்டல அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் நிழற்குடை அமைந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. கட்டும்போது, காலி இடமாக இருந்தது. தற்போது வீடு கட்ட நினைக்கின்றனர்.
பயணியர் நிழற்குடையை இடமாற்றம் செய்ய முடியாது. அந்த இடத்தில் இருந்து சற்றி தள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.