ஏரியில் நாணல் செடிகள் தீவைத்து எரிப்பு: சாலையோர மரங்களும் தீயில் கருகும் அபாயம்
காஞ்சிபுரம்:விஷகண்டிகுப்பம் ஏரியில் நாணல் செடிகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பதால், சாலையோர மரக்கள் தீயில் கருகும் அபாயம் உள்ளது.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த இருவழி சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
முதலில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரையில், 41 கி.மீ., துாரத்திற்கு, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதேபோல, காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 44 கி.மீ., துாரத்திற்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நான்குவழி சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், காஞ்சிபுரம் முதல் பரமேஸ்வரமங்கலம் வரையில், 22 கி.மீ., துாரம் தார் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளது.
இந்த சாலையோரம், 10,500 மரக்கன்றுகளை நட்டு, நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு விஷகண்டிகுப்பம் ஏரி நாணலுக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்திருப்பதால், சாலையோரம் நட்டு வளர்திருக்கும் புங்கன், நாவல் உள்ளிட்ட பல்வேறு விதமான மரங்கள் கருகி உள்ளன.
இதனால், ஆளுயர மரங்கள் இறக்கும் அபாயம் உள்ளது என, பசுமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சாலையோரம் வளர்ந்த மரங்களுக்கு கிளைகள் கழித்து, மீண்டும் துளிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.