கோர்ட் உத்தரவின்படி சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்; விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த கோவிலை, ஐகோர்ட் உத்தரவின்படி நகராட்சி சார்பில் இடித்து அகற்றினர்.

விழுப்புரம் பாத்திமா லே-அவுட், ஜால்னா முதலிதெருவில், 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புவனேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. சாலையை ஆக்கிரமித்துள்ள இக்கோவிலை அகற்ற வேண்டும் என்று, கோவில் அருகே குடியிருந்து வரும் சண்முகம் என்பவர், கடந்த 2019ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் , குறுகிய சாலையை ஆக்கிரமித்து, புவனேஸ்வரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளதால், வீட்டுக்கு சென்று வர இடையூறாகவும் பொது மக்களுக்கும் நெருக்கடி ஏற்படுவதால் , கோவில் ஆக்கிரமிப்பை அகற்றுமாறும் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சாலையை ஆக்கிரமித்து கட்டிய கோவிலை அகற்றுமாறு கடந்த 18.3.2024ல் உத்தரவிட்டது.

அப்போது, கோவிலை கட்டியவர்களே அகற்றிக்கொள்ளுமாறு, கோவில் நிர்வாகிகளுக்கு, விழுப்புரம் நகராட்சி நோட்டீஸ் வழங்கியது. ஆனால், அகற்றாததால் கோர்ட் உத்தரவை நிறைவேற்றவில்லை என, சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதில் சாலையை ஆக்கிரமித்துள்ள கோவிலை முழுமையாக இடித்து அகற்றுமாறு, கடந்த 21.4.2026ம் தேதி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்கு, விழுப்புரம் நகராட்சி ஆணையர் ஷியாமளா, நகரமைப்பு அலுவலர் தாமோதரன், நகரமைப்பு ஆய்வாளர்கள் பிரேமானந்த், விஜயபாஸ்கர் முன்னிலையில், நகராட்சி ஊழியர்கள், ஜெ.சி.பி., இயந்த்திரத்துடன் கோவிலை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதலில், கோவிலிருந்த சிலையை பத்திரமாக மீட்ட நகராட்சி நிர்வாகத்தினர், தொடர்ந்து, கோவில் கோபுரத்திலிருந்து கட்டுமானங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், ஜவ்வாதுஉசேன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement