ஆடல் வல்லான் ஆனந்த தாண்டவம்: உள்ளம் குளிர பக்தர்கள் தரிசனம்
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவின் 11-வது நாளான ஜூன் 3, ஸ்ரீநடராஜப் பெருமான் - சிவகாமசுந்தரி அம்மன் மஹாதரிசனக் காட்சி கோலாகலமாக நடந்தது.
கடந்த 30, 31-ம் தேதிகளில் தேரோட்டம் விமரிசையாக நடந்து முடிந்தது. பின் பரிவேட்டை, தெப்ப உற்சவம் எனத் திருவிழா களைகட்டிய நிலையில், ஜூன் 3 மஹாதரிசன வைபவம் அரங்கேறியது. கனகசபையில் அருள்பாலிக்கும் ஆனந்த நடராஜப் பெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது.
வழக்கமாக நடராஜர் திருவீதியுலா செல்லும் நாளில், சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா சென்று பக்தர்களிடம் அரிசி யாசகம் பெறுவது மரபு.நேற்று காலையில் பிச்சாண்டவர் கோலத்தில் இறைவன் உலா வந்தபோது, திரளான பக்தர்கள் அரிசி சமர்ப்பித்து பயபக்தியுடன் வழிபட்டனர்.
அபிஷேகங்கள் முடிந்த பின், வெள்ளி கிரீடம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி சப்பரங்களில் அம்மையப்பரும், அம்மனும் எழுந்தருளினர். கோவில் முன்புள்ள பட்டி விநாயகரை மூன்று முறை சுற்றிவந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். அவர்களுக்கு இணையாக, ஸ்ரீதேவி - பூதேவி சமேத வீரராகவப் பெருமாள், ஆதிசேஷ வாகனத்தில் 'பாண்டியன் கொண்டை' கிரீடம் அணிந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அம்மையப்பருடன் இணைந்து பெருமாளும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இன்று மஞ்சள்நீர் விழாவும், மலர்பல்லக்கு சேவையும் நடைபெற உள்ளன. நாளை விடையாற்றி உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
மஹா தரிசன வைபவம் அரங்கேற்றம்
திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா சென்ற சிவபெருமான்; சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவிசாலாட்சியம்மன், ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீவீரராகவப்பெருமாள்.