பைக் மீது கார் மோதல் 2 வாலிபர்கள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை மகன் அமர்நாத்,18; இவரது நண்பர், அதே கிராமத்தை சேர்ந்த கனகராஜ் மகன் கவிராஜ்,18; இருவரும் பிளஸ் 2 முடித்துள்ளனர். நேற்று இரவு 9.00 மணியளவில் அமர்நாத், கவிராஜ் ஆகிய இருவரும் டி.வி.எஸ்., மொபட்டிலும், உலகங்காத்தானை சேர்ந்த அபிமுருகன் மகன் வினோத்,21; என்பவர் பஜாஜ் பைக்கிலும் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றனர். தச்சூர் தேசியநெடுஞ்சாலையில் சென்றபோது, அதே திசையில் வந்த மகேந்திரா சைலோ கார் இரண்டு பைக்குகள் மீதும் மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே அமர்நாத் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கவிராஜ், வினோத் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் கவிராஜ் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.