சொல்கிறார்கள் ––––––––––– 3 ஏக்கர் பப்பாளியில் ரூ.30 லட்சம் லாபம்!





திருப்பூர் மாவட்டம், மூலனுார் அருகே, சோமன் கோட்டை கிராமத்தில், ‘பசுந்தமிழ் இயற்கை சார் வேளாணகம்’ என்ற பண்ணை அமைத்து, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள, 55 வயதான சரவணன்:

எங்களுடையது விவசாயக் குடும்பம். அதனால், சிறு வயது முதலே எனக்கு விவசாயத்தில் ஈடுபாடு அதிகம். பள்ளி படிப்பு முடித்ததும், கோவை வேளாண் பல்கலையில், பி.எஸ்சி., விவசாயம் படித்து, முனைவர் பட்டமும் வாங்கினேன்.

பின், புதுச்சேரி விவசாய கல்லுாரி, கோவை வேளாண் பல்கலை, நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைத் துறை என, 21 ஆண்டுகள் பணியாற்றினேன்.

அப்போது, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்தும் தெரிந்து கொண்டேன். இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் மிக எளிமையாகவும் இருந்ததால், இயற்கை விவசாயம் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

வேலையை ராஜினாமா செய்துவிட்டு, எங்கள் குடும்ப சொத்தான, 20 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். பண்ணையில் தலா, 3 ஏக்கர் பரப்பில் பப்பாளி, செடி முருங்கை, தென்னை மற்றும் பசுந்தீவனம் சாகுபடி செய்து வருகிறேன். 1.5 ஏக்கரில் மா, கொய்யா மரங்கள் வைத்துள்ளேன். அரை ஏக்கர் பரப்பில் மாட்டுக் கொட்டகை, விளைபொருட்கள் சேமிப்பு கூடம், ‘போர்வெல்’ அமைத்துள்ளேன். மீதமிருப்பதை மேய்ச்சல் நிலமாக விட்டு விட்டேன்.

நான், ‘ரெட்லேடி’ என்ற ரக பப்பாளியை தான் சாகுபடி செய்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு, 800 மரங்கள் என, 3 ஏக்கர் பரப்பில், 2,400 மரங்கள் உள்ளன. ஒரு ஏக்கர் பரப்பில் சராசரியாக, 50,000 கிலோ பழங்கள் மகசூல் கிடைக்கிறது.

இயற்கை விவசாயத்தில் விளைந்த பப்பாளி என்பதாலும், தரத்துடன், சுவையாக இருப்பதாலும், சுற்றுவட்டார மக்கள் என் பண்ணைக்கே வந்து வாங்கி செல்கின்றனர். இங்கு விற்பனை செய்தது போக, மீதி பழங்களை பழமுதிர்சோலை, பல்பொருள் அங்காடி மற்றும் சில்லரை பழக்கடைகளுக்கும் விற்பனை செய்கிறேன்.

கிலோவுக்கு, 28 முதல் 40 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இந்த வகையில் ஏக்கருக்கு, 50,000 கிலோ பழங்களின் விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு குறைந்தபட்சம், 14 லட்சம் ரூபாயும், செலவுகள் போக, 10 லட்சம் ரூபாய் வரை லாபமும் கிடைக்கிறது. ஆக மொத்தம், 3 ஏக்கர் பப்பாளி சாகுபடி வாயிலாக, 30 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

தொடர்புக்கு: 94432 95785.

***

Advertisement