பசுக்கன்று திருடர்கள் இருவருக்கு தர்ம அடி

ஆவடி: பசுக்கன்றுகளை ஆட்டோவில் கடத்திய இருவரை, மாட்டின் உரிமையாளர் மடக்கிபிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.

அயப்பாக்கம், திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணா, 51; பால் வியாபாரி. இவர் பராமரித்து வரும் மூன்று பசுக்கன்றுகள், நேற்று வீட்டின் அருகே படுத்திருந்தன.

நள்ளிரவு அவற்றின் அலறல் சத்தம் கேட்டு, ஹரி கிருஷ்ணா வீட்டின் வெளியே வந்துள்ளார். அப்போது, பசுக்கன்றுகளை ஆட்டோவில் கடத்தி செல்வது தெரிய வந்தது.

உடனே, ஹரிகிருஷ்ணா உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அனைவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.

ஆட்டோவில் இருந்த இருவருக்கும் தர்ம அடி கொடுத்து, அயப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பசுக்கன்றுகளை கடத்தியது, நொளம்பூரைச் சேர்ந்த சேர்ந்த ஆனந்த், 30, நரேந்திரன், 36 என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர். அவர்களது கூட்டாளியான ஜெகன் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement