காஸ் லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே, சென்டர் மீடியனில் காஸ் லாரி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் இருந்து அரியலுாருக்கு காஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று நேற்று அதிகாலை கடலுார்– விருத்தாசலம் சாலையில் சென்றது. இந்த லாரியை பண்ருட்டி, கரும்பூரை சேர்ந்த சந்திரசேகர், 52; என்பவர் ஓட்டினார்.
குள்ளஞ்சாவடி அருகே பெரிய காட்டுசாகை பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரியின் பக்கவாட்டு கம்பிகள் உடைந்து காஸ் சிலிண்டர்கள் சாலையில் விழுந்தன.
தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார், மாற்று வாகனம் ஏற்பாடு செய்து, 300 காஸ் சிலிண்டர்களை ஏற்றி அனுப்பினர்.
தொடர்ந்து விபத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது. இதனால் குள்ளஞ்சாவடி அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மறு பக்க சாலையில் சென்றன. இதையொட்டி அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.