பயிர்களை நாசம் செய்யும் மயில்கள்: வானுார் சுற்று வட்டார விவசாயிகள் கவலை

வானுார்: வானுார் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிர்களை மயில்கள் நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வானுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. இதை நம்பி 70 சதவீதம் விவசாயிகள் தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தேசிய பறவையான மயில்கள், விவசாய நிலங்களில் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.

குறிப்பாக வானுார் மட்டுமில்லாமல், துருவை, ஒழிந்தியாம்பட்டு, ராயப்புதுப்பாக்கம், புள்ளிச்சப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் மயில்கள், கூட்டம் கூட்டமாக சென்று, சாகுபடி செய்துள்ள பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன.

அவற்றை விரட்டினாலும், கூட்டம் கூட்டமாக வந்து செல்வதால், கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் விழிபிதுங்கி உள்ளனர். இது மட்டுமில்லாமல், விவசாய நிலங்களில் சுற்றி திரியும் மயில்களை சமூக விரோதிகள், பிடித்து அதன் தோகையை பிடுங்குவது, வேட்டையாடும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில், மயில்கள் சுற்றித்திரியும் வானுார் சுற்று வட்டார கிராமங்களில் வனத்துறையினர் ரோந்து சென்று, கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement